
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டியின் கூட்டாளியான தொழிலதிபர் பரஸ்மல் லோதாவுக்கு சொந்தமான ரூ.9.7 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் சில மாதங்களுக்கு முன்பு வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.34 கோடி புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டு சேகர் ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபரும், ஹவாலா பணம் பரிமாற்ற புரோக்கருமான பரஸ்மல் லோதா மும்பையில் பிடிபட்டார்.
அவரிடம் விசாரணை நடத்தியதில் சேகர் ரெட்டிக்கு இவர்தான் புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுத்தது என தெரிய வந்தது.
சேகர் ரெட்டிக்கு ரூ. 8 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தார்.
இதைதொடர்ந்து சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட புதிய ரூபாய் நோட்டுகள் லோதா கொடுத்தது தான் என்று அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் அசோக்ஜெயின், மஹாவீர்ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான 12 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.
இந்நிலையில் பரஸ்மல் லோதாவின் ரூ.9.7 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.