வர்தாவால் வாடும் வண்டலூர் ….உச்சகட்ட சேதத்தால் உயிரியல் பூங்காவை பார்வையிட வரும் 21 ம் தேதி வரை தடை

First Published Dec 15, 2016, 6:52 AM IST
Highlights


வர்தாவால் வாடும் வண்டலூர் ….உச்சகட்ட சேதத்தால் உயிரியல் பூங்காவை பார்வையிட வரும் 21 ம் தேதி வரை தடை

விதவிதமான விலங்குகள்…வண்ண வண்ண  பறவைகள் லட்சக்கணக்கான மரங்கள் என்று சென்னை வண்டலூர்  உயிரியல் பூங்கா நாள்தோறும் வரும் சுற்றுலா பயணிகளை ஆனந்தத்தில் ஆழ்த்தி வருகிறது.

1985-ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். இப்பூங்காவை திறந்து வைத்தார். 1,486 ஏக்கர் பரப்பளவு கொண்ட இயற்கை வனத்தால் சூழப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் , பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன என மொத்தம் 2,500 விலங்குகள் உள்ளன.

இத்தகைய பெருமை மிகுந்த வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று உருக்குலைந்து போய் காணப்படுகிறது. வர்தா புயல் ஆடிய கோர தாண்டவத்தில் வரலாறு காணாத அளவுக்கு சேதமடைந்துள்ளது. நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்து செல்லும் இப்பூங்கா இன்று உள்ளே நுழைய முடியாத அளவுக்கு சின்னாபின்னமாகியுள்ளது.உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செல்ல கூடிய சுற்றுப்பாதையில் சாலையின் இருபுறங்களிலும் இருந்த மரங்கள், விலங்குகளின் கூண்டுகளை சுற்றியும், கூண்டுகளுக்கு உள்ளேயும் இருந்த மரங்கள் என பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. தைலம் மரம், தூங்கு மூஞ்சு மரம் உள்ளிட்ட அரியவகை மரங்களும் புயல் காற்றில் முற்றிலும் அழிந்து போயின.

பூங்காவுக்குள் யாரும் நுழைய முடியாத அளவுக்கு  பூங்கா மொத்தமும் குப்பை மேடாகி போனது.

புயல் முன்னெச்சரிக்கை காரணமாக பூங்கா ஊழியர்கள் விலங்குகளை ஏற்கனவே கூண்டுக்குள்  அடைத்துவிட்டதால் ஊழித் தாண்டவம் ஆடிய புயலில் அவை அத்தனையும் தப்பின. தற்போது சேதமடைந்த பூங்காவை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். வர்தா புயலால் 10 கோடி ரூபாய் அளவுக்கு சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சேதமடைந்த பூங்காவை முதலமைச்சர் ஓ,பன்னீர் செல்வம் பார்வையிட்டு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளார்.

தற்போது பூங்காவை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் வரும் 21 ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டள்ளது.

 

click me!