
நாகப்பட்டினம்
சீர்காழியில் இறந்து கரை ஒதுங்கியுள்ள அரியவகை ஆமைகளால் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டி வனத் துறையினருக்கு மீனவர்களும், கடல்வாழ் உயிரின ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி உள்ளிட்ட 16 கடலோரக் கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களை ஒட்டியுள்ள கடற்கரைகளுக்கு வருடந்தோறும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை அரிய வகை ஆலிவ்ரிட்லி ஆமைகள் வந்து, கடற்கரை மணல் பகுதியில் முட்டையிட்டு, அதை மூடிவிட்டுச் செல்லும்.
பின்னர், அந்த முட்டைகள் இயற்கையாக பொரித்து, அதிலிருந்து வெளிவரும் ஆமைக் குஞ்சுகள் தானாக கடலுக்குள் சென்றுவிடும்.
இந்த வகை ஆமைகளைப் பாதுகாக்க, தமிழக அரசின் வனத் துறை சார்பில் 1985-ஆம் ஆண்டு முதல், முட்டைகளைச் சேகரித்து, பொரிப்பகத்தில் வைத்து குஞ்சு பொரித்ததும், அவை கடலில் விடப்படுகின்றன.
இந்த நிலையில், இந்தாண்டு முட்டையிட ஆமைகள் கடற்கரைக்கு வரத்தொடங்கியுள்ள நிலையில், பருவநிலை மாற்றம், நீரோட்டம் மற்றும் படகுகளில் அடிபட்டு சில ஆமைகள் இறக்கின்றன. இவ்வாறு இறக்கும் ஆமைகள் அலைகளால் அடித்துவரப்பட்டு சீர்காழி அருகேயுள்ள கடற்கரைப் பகுதிகளில் ஒதுங்குகின்றன.
இந்த ஆமைகள் 30 முதல் 50 கிலோ எடையுள்ளதாக உள்ளன. இது அழுகத் தொடங்கியுள்ளதால் கடற்கரைப் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இறந்து கரை ஒதுங்கியுள்ள ஆமைகளை அப்புறப்படுத்தவும், இனி இதுபோன்று ஆமைகள் இறப்பதைத் தடுக்கவும் வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களும், கடல்வாழ் உயிரின ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.