வேன் கவிழ்ந்து சிறுமி பலி; உடன் பயணித்த 17 பேர் பலத்த காயம்; குடும்பத்தோடு சாமி கும்பிட சென்றபோது சோகம்...

First Published Aug 6, 2018, 1:22 PM IST
Highlights

மதுரையில் இருந்து குடும்பத்தோடு சாமி கும்பிட சென்றவர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். உடன் பயணித்த 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். 

மதுரை மாவட்டம், திருநகரைச் சேர்ந்தவர் நாகசுப்ரமணியன். இவர் தனது குடும்பத்தோடு வேன் ஒன்றில் நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட புறப்பட்டனர். வேனை மாரிமுத்து என்பவர் ஓட்டினார். இதில் மொத்தம் 18 பேர் சென்றனர்.

இந்த வேன் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, இராமசாமிபுரம் விலக்குப் பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடிரென வேன் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறிய வேன், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி உருண்டு சென்று தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்தது. 

இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை நகர காவலாளர்களும் வேனில் வந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் வேனை ஓட்டிவந்த மாரிமுத்துவின் மகள் 10-ஆம் வகுப்பு மாணவியான சிந்தியா என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், உடன் பயணித்த நாகசுப்ரமணியனின் சகோதரர் ராஜா இளங்கோவன், நித்யா, விக்னேஷ் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மகாலட்சுமி, சீதாலட்சுமி, குருநாதன், மகேஸ்வரி, ஐஸ்வர்யா, மீனாட்சி, சாரதா, சத்யா மற்றும் மாரிமுத்து ஆகிய ஒன்பது பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த காவலாளர்கள் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர். 

சாமி கும்பிட சென்றவர்கள் சென்ற வேன் கவிழ்ந்ததில் சிறுமி ஒருவர் பலியானதும், மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர் என்ற தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 

click me!