
மதுராந்தகம் அருகே வேன் மீது அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதியதில் வேன் ஓட்டுநர் உயிரிழந்தார். இரு அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் உள்பட 17 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
மதுராந்தகம் அருகே ஜானகிபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மதுபான தொழிற்சாலை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இயங்கி வருகிறது. அங்கு மதுபானம் நிரப்பத் தேவையான காலி மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு, வேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை சென்றது.
வையாவூரைச் சேர்ந்த மணிகண்டன் (38) வேனை ஓட்டிச் சென்றார். தொழிற்சாலைக்கு செல்வதற்காக வேன் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, தாம்பரத்தில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து வேன் மீது மோதியது. மேலும் அருகில் இருந்த கடையின் முன்புறம் இருந்த மரத்தில் மோதி பேருந்து நின்றது. இதனால் கடையின் முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இரு சக்கர வாகனங்கள் நசுங்கின.
பேருந்து மோதிய வேகத்தில் சேதம் அடைந்த வேன் சாலையின் எதிர்த்திசையில் கவிழ்ந்தது.
அதேசமயம் வந்தவாசியில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த வேன் மீது மோதியது. இதில் வேன் ஓட்டுநர் மணிகண்டன் (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இரு அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் உள்பட இரு பேருந்துகளில் பயணம் செய்த 17 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மதுராந்தகம் காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டீபன் தலைமையிலான காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.