
அம்பத்தூர் தொழிற்பேட்டையில், தொழிற்சாலைகள் நலிவடைந்து இருப்பதால், இந்த ஆண்டு ஆயுத பூஜை விழா பொலிவிழந்து காணப்படுகிறது.
அம்பத்தூர் தொழிற்பேட்டையைச் சுற்றியுள்ள பாடி, கொரட்டூர், அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
இந்த நிறுவனங்களில், வருடா, வருடம் ஆயுதப் பூஜையை தொழிலாளர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அப்போது, தொழிற்சாலையையும், இயந்திரங்களையும் சுத்தம் செய்வது, வர்ணம் பூசுவது, வண்ணத் தாள்களை ஒட்டி அலங்கரிப்பது, பொரி, அவல், இனிப்புகளை கடவுளுக்குப் படைத்து பூஜை செய்வது போன்றவற்றை மேற்கொள்வார்கள். ஆயுத பூஜையையொட்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஏராளமான கடைகள் உருவாகும்.
ஆனால், இந்த ஆண்டு ஆயுதப் பூஜை பொலிவிழந்து காணப்படுகிறது. கடைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில், கடைகளிலிருந்து ஆயிரம் ரூபாய்க்கு பொருள்களை வாங்கும் சிறு நிறுவனங்கள் தற்போது சில நூறு ரூபாய் அளவுக்கே கொள்முதல் செய்துள்ளன.
பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதாலும், சில தொழிற்சாலைகள் நலிவடைந்து போனதாலும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆயுத பூஜை பொலிவிழந்து காணப்படுகிறது.
அடுத்த வருடமாவது தொழில் துறை வளர்ச்சியடைந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை புதுப்பொலிவுடன் ஆயுத பூஜையைக் கொண்டாட வேண்டும் என்று தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.