
உசிலம்பட்டியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால், டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் தீப்பிடித்து எரிந்து நாசமான விபரீதம் ஏற்பட்டது.
உசிலம்பட்டியில் திருமணங்கள், காதணிவிழா உள்பட சுபகாரிய விழாக்களுக்கும், துக்க நிகழ்ச்சிகளுக்கும் பட்டாசு வெடித்து ஊர்வலம் செல்வது வழக்கம். ஆனால் உசிலம்பட்டியில் சமீபகாலங்களாக அளவுக்கு அதிகமான பட்டாசுக்களை வெடித்து வருகின்றனர். இதனால், சாலை ஓரம் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் என்று அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமமடைந்து வருகின்றனர்.
குறிப்பாக அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களில் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும், தொடர்பட்டாசுகள், கையில் பட்டாசுகளை பிடித்து சுவற்றில் வீசுவது, வானத்தை நோக்கி பட்டாசுகளை வீசுவதால் நடந்து செல்பவர்கள் மீது பட்டாசு விழுந்து வெடித்து அவர்கள் பலத்த காயமடைந்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவத்தால் இந்த பகுதியில் ஏராளமானோர் கண்கள் இழந்தும், கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டும் உடல் ஊனமாகி போனவர்கள் அதிகம்.
நிகழ்ச்சி நடத்துபவர்களின் வறட்டு கௌரவத்தை வெளிப்படுத்த பட்டாசுகளை வெடிக்க செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த இடையூறாக உள்ளது என இந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பட்டாசு வெடிப்பதை தடைசெய்யக்கோரி மனு செய்தனர்.
இந்த மனுவை பரிசீலித்த வருவாய் கோட்டாட்சியர், காவல்துறை துணை சூப்பிரண்டு, நகராட்சி அதிகாரிகள், மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் முன்னிலையில் உசிலம்பட்டி நகர்பகுதிகளுக்குள் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் பட்டாசு வெடிக்ககூடாது என கடந்த சில வருடங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.
ஆனால், இதனை ஒரு சிலரைத் தவிர யாரும் மதிப்பதில்லை. பட்டாசு வெடிக்க தடை நடைமுறையில் உள்ளதா? இல்லை அதிகாரிகளின் மாற்றத்தால் நீக்கப்பட்டுள்ளதா? இந்தநிலை தொடர்ந்தால் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக எங்கே செல்வது? இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் குரல் எழுப்புகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை மதுரை சாலையில் திருமண விழாவிற்காக பட்டாசு வெடித்து சென்றனர். அப்போது வைக்கோல் ஏற்றிய ஒரு டிராக்டர் வந்தது. சாலையில் வெடித்த பட்டாசு சிதறி டிராக்டர் மேல் இருந்த வைக்கோல் மீது விழுந்தது தீப்பற்றி எரிந்தது. இதைக் கவனிக்காமல் டிரைவர் டிராக்டரை ஓட்டி சென்றார். அதிக அளவு வாகனங்களும், ஏராளமான பொதுமக்களும் சென்ற சாலையில் தீ மளமளவென பற்றியவாறு டிராக்டர் சென்றது அனைவரையும் பதற வைத்தது.
அவர்கள் டிராக்டரை நிறுத்த செய்து, உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை வேகமாக அணைத்தனர். இதனால் டிராக்டர் எவ்வித சேதமின்றி தப்பியது.
இது சம்மந்தமாக வகுரணியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் மீது வழக்குப்பதிவு செய்து உசிலம்பட்டி நகர் காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்து பெரும் விபத்தாகாமல் தவிர்க்கப்பட்டது.
மேலும் இதுபோன்ற விபத்துக்களால் பெரிய அளவில் ஆபத்து ஏற்படாதவாறு நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.