
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து அக்கா மலை கிராஸ் ஹிட்ஸ் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் கருமலைப் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சீதாலட்சுமி என்பவர் தன்னுடைய மகள் பிந்துவை துணி துவைப்பதற்காக ஆற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காற்றாற்று வெள்ளம் அவர்களை சூழ்ந்து கொண்டது. இதில் தாய், மகள் இருவரும் தத்தளித்த படி காப்பாற்ற சொல்லி அலறி கூச்சலிட்டனர்.
அப்போது அன்னை வேளாங்கண்ணி மாதா கோவிலின் மாதாந்திர ஆராதனைக்காக வந்திருந்த பக்தர்கள் தண்ணீரில் தத்தளித்த தாய் மகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கயிறு கட்டி நீண்ட போராட்டத்திற்கு பின்பு ஆற்றில் இருந்து இருவரையும் காப்பாற்றியுள்ளனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. உடனடியாக வால்பாறை தீயணைப்புத் துறைக்கு தெரிவிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது இளைஞர்கள் அவர்களை மீட்டெடுத்துள்ளனர். பின்னர் பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளை அழைத்து ஆற்றுப்பகுதிக்குள் இறங்க வேண்டாம் மேல்பகுதியில் திடீரென காற்றாற்று வெள்ளம் வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளது.
எனவே அப்பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு ஆற்றில் இறங்க கூடாது என தீயணைப்புத்துறை மேற்பார்வையாளர் வேலு அறிவுரை வழங்கினார். மேலும் அப்பகுதியில் ஆற்றில் துணி துவைப்பதற்கோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவும் கூடாது என தீயணைப்புத்துறை எச்சரிக்கை செய்தனர். தாய் மற்றும் மகளை மீட்டெடுத்த இளைஞர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.