
சிவகங்கை
காரைக்குடி, தேவகோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளைகளில் இயக்கப்படும் காலவதியான பேருந்துகளை ஒரு வாரத்திற்குள் நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கெடு வைத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சிவகங்கை மாவட்டச் செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், காரைக்குடி காவல் துணைக் காணிப்பாளர் கார்த்திகேயனிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், "அரசுப் போக்குவரத்துக் கழக மண்டலத்தில் காரைக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் காரைக்குடி, தேவகோட்டைக் கிளைகளில் காலாவதியான பேருந்துகளை இயக்கப்படுவதால் விபத்து ஏற்படுகிறது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஆறு ஆண்டுகள் அல்லது 7 இலட்சம் கிலோ மீட்டர் ஓடிய பேருந்துகளை காலாவதியான பேருந்துகள் என்று கழிக்கப்படவேண்டும்.
ஆனால், காரைக்குடி மற்றும் தேவகோட்டைக் கிளைகளில் வரைமுறையை மீறி பல வருடங்களாக பேருந்துகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
காரைக்குடிக் கிளையில் 2006-ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் ஓடிய நான்கு பேருந்துகளும், 2007 முதல் 10 ஆண்டுகள் ஓடிய 11 பேருந்துகளும், தேவகோட்டைக் கிளையில் 2005-ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக ஒரு பேருந்தும், 2006 முதல் 11 ஆண்டுகள் ஓடிய 7 பேருந்துகளும், 2006-ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஓடிய மூன்று பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
இது மக்களின் உயிருக்கு ஆபத்தானது. இதில் காரைக்குடி மண்டல போக்குவரத்து அலுவலர் காலாவதியான பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் போக்குவரத்து அலுவலகம் முன்பாக மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் பேராட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அதில் எச்சரித்துள்ளார்.