
கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பலர் கோஷமிட்டனர்.
கவிஞர் வைரமுத்து கடந்த ஞாயிறு அன்று ராஜபாளையத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து திருப்பாவை உள்ளிட்ட பாடல்களால் இறைவனைத் தொழுது ஆன்மிக மணம் பரப்பிய ஆண்டாளை அவதூறான வார்த்தைகளில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். இதை அடுத்து நிகழ்ச்சியைக் கேட்கத் திரண்டிருந்த பெண்கள் பலர் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இந்தப் பிரச்னை பெரிதாக உருவெடுத்துள்ளது. ஆன்மிகப் பெரியவர்கள், மடாதிபதிகள் உள்ளிட்டோர் இந்த விவகாரத்தில் கைகோத்து இறங்கியுள்ளனர். இன்று பல இடங்களில் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் ஜீயரும் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அவர்கள், பிரச்னைக்குரிய விதத்தில் பேசி, ஆன்மிக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்திய வைரமுத்துவும், அதை பின்னர் ஒரு கட்டுரையாக வெளியிட்ட நாளிதழின் ஆசிரியரும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து, எங்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இன்னும் ஒரு வார காலம் நேரம் தருகிறோம், அதற்குள் இருவரும் இங்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்த வாரம் முதல் மேலும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்து கோஷமிட்டனர்.
அன்னை ஆண்டாள் சந்நிதிக்கு வந்து வரும் புதன்கிழமைக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், காணும் பொங்கல் தினத்தன்று, மாபெரும் ஆர்ப்பாட்டம், பஸ் மறியல் உள்ளிட்டவை நடைபெறும் என்று ஜீயர் சுவாமிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் மற்றும் தாய்மார்கள் பலர் கண்ணீர் விட்டு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த இயலாமல் கதறி அழுதனர். எங்கள் தாயார் ஆண்டாளை எங்கள் ஊருக்கே வந்து இழிவு செய்து பேசியிருக்கிறார்கள், அவர்கள் எங்கள் ஊருக்கு வந்து, எங்கள் கோயிலுக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் பலர் கோஷமிட்டனர். மேலும், அரசு இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ரேசன் கார்டை திருப்பிக் கொடுப்போம் என்று பெண்கள் உணர்ச்சி வசப்பட்டுப் பேசினர்.