
சிவகங்கை
சிவகங்கை பிளாஸ்டிக் பையை தூக்கி எறிந்துவிட்டு துணிப் பையை பயன்படுத்தக் கோரி பேரூராட்சி சார்பில் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணிக்கு பேரூராட்சி தலைமை எழுத்தர் முருகன் தலைமை தாங்கினார். உணவுப் பாதுகாப்பு அலுவலர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் பழனிக்குமார், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காந்தி சிலையில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி பேருந்து நிலையம், மதுரை சாலை வழியாக அண்ணாசிலை வரை சென்று மீண்டும் காந்தி சிலையை அடைந்தது.
இந்தப் பேரணியில் "துணிப் பையை பயன்படுத்தக் கோரியும், பிளாஸ்டிக் பையை ஏன் பயன்படுத்தக் கூடாது?" என்றும் விளக்கங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஆர்.சி.பாத்திமா நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள், முழக்கமிட்டனர்.
கடைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளித் தலைமையாசிரியர் குமார், பேரூராட்சி மேற்பார்வையாளர்கள் மோகன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.