
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து கோயம்பேடு வழியாக மீனம்பாக்கம் வரையும், அண்ணா சாலை வழியாக மீனம்பாக்கம் வரையும் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது.
இதில், கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரை கடந்த சில மாதங்களுக்கு முன் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.
முன்னதாக வண்ணாரப்பேட்டையில் இருந்து பிராட்வே வரை பூமிக்கு அடியில் ரயில் செல்வதற்காக சுரங்கம் அமைக்கும் பணி முடிந்துள்ளது. தற்போது, அண்ணாசாலை புதிய தலைமை செயலக கட்டிடம், எல்ஐசி, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை வரை பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில், திடீரென பள்ளம் தோன்றியது. இதில், மெட்ரோ ரயில் பணிக்காக பயன்படுத்தும் சிமென்ட் கலவை கசிந்து சாலை முழுவதும் பரவியது. இதனால், அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தகவலறிந்து மெட்ரோ ரயில் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார், அப்பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை சீரமைத்து வருகின்றனர். இதனால், அண்ணாசாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. காலை வேளை என்பதால், வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.
கடந்த 3 மாதத்துக்கு முன், தேனாம்பேட்டை பகுதியில் இதேபோன்று மெட்ரோ ரயிலுக்கான வேலை நடக்கும் இடத்தில், திடீர் பள்ளம் தோன்றியது என்பது குறிப்பிடத்தக்கது.