
டெல்லியில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்களும், விவசாயிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இதையொட்டி தஞ்சையில் தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் த.மணிமொழியன், தமிழ்த் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங் கிணைப்பாளர் அ.நல்லதுரை, மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு நிர்வாகி பாரதிசெல்வன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும். விவசாய கடன்களை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்களை முன் வைத்துள்ளனர்.
3வது நாளாக நடக்கும் இந்த போராட்டத்தால், தஞ்சையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சையில் நடைபெறும் விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து, அவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.