
சென்னை ஆர்.கே நகரில் சீட்டு பணத்தை திருப்பி கேட்ட மருமகனை ஆட்டோ டிரைவர் கத்தியால் குத்திக் கொன்றார். இதில் உடனிருந்த உறவினருக்கும் கத்தி குத்து விழுந்தது.
சென்னை ஆர்.கே.நகர் கொருக்குபேட்டை பாரதி நகர் 2 வது தெருவில் வசிப்பவர் சீனிவாசன்(42). இவர் ஆட்டோ டிரைவராக இருக்கிறார். மேலும் ஏல சீட்டும் நடத்தி வந்துள்ளார்.
ஏல சீட்டு நடத்தியதில் சீட்டை ஏலம் எடுத்த சிலர் பணம் தராமல் ஏமாற்றிவிட்டதால் சீனிவாசனுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ஒழுங்காக சீட்டு கட்டிய பலருக்கு சீட்டு தொகையை கொடுக்க முடியாமல் சீனிவாசன் தவித்தார்.
சீட்டு போட்டவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கொடுத்து வந்தார். சீட்டு போட்டதில் சீனிவாசனின் சகோதரிகள் சுசிலா மற்றும் பிரேமாவும் அடக்கம்.
முதலில் வெளியாட்களுக்கு பணத்தை செட்டில் செய்துவிட்டு பிறகு உங்களுக்கு செட்டில் பண்ணுகிறேன் என்று சீனிவாசன் சகோதரிகள் சுசிலாவிடமும் பிரேமாவிடமும் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே பணம் தராமல் இழுத்தடித்ததால் கொருக்குபேட்டை ஜீவா நகரில் வசிக்கும் சீனிவாசனின் சசோதரி பிராமாவின் மகன் ஜனார்த்தனன்(20) தாய்மாமன் சீனிவாசன் வீட்டிற்கு சென்று தங்களுக்கு சேரவேண்டிய சீட்டு பணம் 30 ஆயிரத்தை கேட்டுள்ளார்.
அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பிரச்சனையை பேசி தீர்த்து கொள்ளலாம் என்று அதே தெருவில் வசிக்கும் இன்னொரு தாய்மாமன் ரத்தினசாமி வீட்டிற்கு அனைவரும் சென்றுள்ளனர்.
நேற்று மாலை 4 மணி அளவில் சமாதான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, சீட்டு பணத்தை தராமல் இழுத்தடிக்கும் தாய்மாமன் சீனிவாசனை ஜனார்த்தனன் மரியாதை குறைவாக பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் அருகில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து வேகமாக ஜனார்த்தனன் மார்பில் குத்தியுள்ளார்.
அதை தடுக்க சென்ற உறவினர் மணிகண்டனுக்கும் கத்தியால் குத்தியதில் காயம் ஏற்பட்டது.
பின்னர், இருவரையும் உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து ஆர்.கே.நகர் போலீசார் பிரிவு 341, 294(b), 324, 307, மற்றும் 506(2) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். காவல் நிலையத்தில் சரணடைந்த சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கத்தி குத்து நுரையீரலில் பலமாக பாய்ந்ததால் சிகிச்சை பலனின்றி ஜனார்த்தனன் உயிரிழந்தார்.
இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. சாதாரண பண விவகாரத்தில் தங்கை மகனை தாய்மாமனே குத்தி கொன்றது கொருக்குபேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.