
ஜெனிவாவில், மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு மிரட்டல் விடுத்த நிலையில் அவருக்கு 2 காவலர்கள் கொண்டு பாதுகாப்பு ஐ.நா.வால் அமைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 72-வது பொதுக் கூட்டம் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து மதிமுக பொது செயலாளர் வைகோ, இயக்குநர் கவுதமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாதம் 29 ஆம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறும் நிகழ்வுகளில் வைகோ பங்கேற்கிறார். நேற்று ஐ.நா. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வைகோவுக்கு, இலங்கையைச் சேர்ந்த சிலர் அவரிடம் சென்று மிரட்டும் வகையில் பேசினர். இந்த நிலையில் வைகோவுக்கு இன்றும் அவர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மிரட்டல் குறித்து வைகோ, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நான் உரையாற்றி முடித்ததும், பெண் ஒருவர் என்னிடம் வந்து, இலங்கையைப் பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்றார்.
அவர் பேசிக் கொண்டிருந்தபோதே கூடுதலாக 4 இளைஞர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் என்னை மிரட்டத் தொடங்கினர். நான் பேசுவதை வீடியோ எடுத்து வைத்து, நான் பிரச்சனை செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்க முயன்றனர்.
இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் நான் புகார் அளித்தேன். அவர்களும் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தனர் என்று வைகோ கூறியிருந்தார்.
இந்த நிலையில், வைகோவுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இரண்டு காவல் அதிகாரிகளை ஐ.நா. நியமித்துள்ளது. வைகோவுக்கு இன்று இரண்டாம் நாளாக இடையூறு ஏற்படுத்தப்பட்ட நிலையில் ஐ.நா. இந்த பாதுகாப்பை வழங்கியுள்ளது.
வைகோவுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்த தகவல் ஏதும் தற்போது வெளியாகவில்லை. ஆனால், அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து போகப் போக தெரியும் என்று கூறப்படுகிறது.