
இந்திய துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா, ஆர்.கே.நகரில் இடைத் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல், வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் ஏற்பாடுகள் முழுமையாக நடைபெற்றுவருகின்றன. பிரவீன் நாயர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து, சென்னை மாநகர காவல்துறை கமிஷனராக இருந்த ஜார்ஜ் பணியிட மாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பதிலாக கரண் சின்ஹா புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேட்புமனு பரிசீலனைகள் நிறைவடைந்த நிலையில், அனைத்து கட்சியினரும் தொகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், துணைத் தேர்தல் ஆணையர் உமேஷ் சின்கா சென்னை வந்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, பிரவீன் நாயர், மாவட்ட தேர்தல் அலுவலர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து, தேர்தல் குறித்த ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.