
திருவாரூரில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடித்திவிட்டு பெண் சிறுமியர்கள் என்றும் பாராமல் குடிவெறியர்கள் அத்துமீறுவதால் கடும் கோபத்தில் “குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் எதுக்கு? அகற்று! என்று மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
திருவாரூர் - நாகை பைபாஸ் சாலையில் மதுரா நகர், கலைஞர் நகர், அண்ணா நகர் ஆகிய பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளின் மத்தியில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்படுகிறது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் சிறுமியர், பெண்கள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மது அருந்துபவர்கள் சில நேரங்களில் பெண் பிள்ளைகள் என்றும் பாராமல் எல்லை மீறுவதால் இங்கு பெண் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் கடையை இந்த பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசிற்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு டாஸ்மாக் கடையை அகற்றும் எண்ணம் சிறிதும் இல்லை என்பது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதில் இருந்து நன்றாக தெரிகிறது.
இதுவரை பெண் பாதுகாப்பை நினைத்து வேதனை அடைந்து வந்த அப்பகுதி மக்கள் நேற்று பொங்கி எழுந்து “மதுக்கடையை அகற்று” என்று திருவாரூர் அருகே உள்ள மதுரா நகரின் நுழைவுவாயின் முன்பு போராட்டத்தில் இறங்கினர்.
இந்தப் போராட்டத்திற்கு நகர் நலச்சங்க தலைவர் ரவி தலைமை வகித்தார்.
இந்தப் போராட்டத்தில் மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
“குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்கடை இருக்க கூடாது” என்ற விதி உள்ளது என்பதை மறந்தும், அதனை மீறியும் இந்தப் பகுதியில் மதுக் கடை வைக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த மதுக்கடையை அகற்று என்று முழக்கங்களை எழுப்பி போராடினர்.