
மீத்தேன் திட்டத்தை ஐட்ரோ கார்பன் என்ற பெயரில் தமிழகத்தில் திணிக்க நினைக்கும் மத்திய அரசின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஒரே போடாக போட்டார்.
திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு சார்பில் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம் நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டுப் பேசினார்.
அவர் பேசியது: “தமிழக அரசின் நிர்வாகம் சுதந்திரமாக செயல்படவில்லை. விவசாயிகள் பிரச்சனை, மீனவர்கள் பிரச்சனை, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் போராடினர். ஆனால், இப்போது, அதே திட்டத்தை மாற்றி ஐட்ரோ கார்பன் என்ற பெயரில் மத்திய அரசு இத்திட்டத்தை தமிழகத்தில் திணிக்க நினைக்கிறது. மத்திய அரசின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. தமிழகத்தில் ஐட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவே மாட்டோம்.
தனித் தன்மையுடன் இயங்கக்கூடிய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் பாரபட்சமாக செயல்படுகிறது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் வருகிற ஏப்ரல் 3-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கிறது” என்று அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிசாமி, சிவபுண்ணியம், உலகநாதன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் மாசிலாமணி உள்பட பலர் பங்கேற்றனர்.