இந்தியாவிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் படகுகளை கடலில் இறக்க நவீன காற்றுப் பை; மேட் இன் சைனா…

 
Published : Mar 30, 2017, 10:44 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
இந்தியாவிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் படகுகளை கடலில் இறக்க நவீன காற்றுப் பை; மேட் இன் சைனா…

சுருக்கம்

Tuticorin in India for the first time in the modern boats in the sea air bag die Made in China

படகுகளை கடலில் இறக்கவும், கரைக்கு ஏற்றி பழுது பார்க்கவும் காற்றுப் பை என்ற நவீன முறையை இந்தியாவிலேயே முதல்முறையாக துாத்துக்குடியில் தனியார் நிறுவனம் ஒன்று செய்து காட்டியது. இந்த நவீன காற்ற்ப்பை சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் மீன்பிடித் துறைமுகத்தை ஒட்டி சில தனியார் படகு கட்டும் தளங்கள் இருக்கின்றன. இங்கு பிரமாண்டமான விசைப்படகுகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், பழுதாகும் விசைப்படகுகள் இந்த தளங்களுக்கு கொண்டுவரப்பட்டு, பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன.

புதிதாக உருவாக்கப்படும் விசைப்படகுகளை கடலில் இறக்குவதற்கும், பழுதாகும் படகுகளை கடலில் இருந்து கரைக்கு ஏற்றுவதற்கும், பழுது சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் கடலில் இறக்குவதற்கும் பழைய பாரம்பரிய முறையே கடைபிடிக்கப்பட்டு வந்தது.

அதாவது, இரும்பிலான ரோலர்களை படகுகளுக்கு அடியில் போட்டு, பொக்லைன் மூலம் இழுத்து படகுகள் கரைக்கு கொண்டுவரப்படும். அதேபோல் ரோலர்களை போட்டு மணல் அள்ளும் இயந்திரம் மூலம் தள்ளி கடலுக்குள் இறக்கப்படும்.

இந்த முறையில் படகுகளை கடலில் இருந்து கரைக்கு ஏற்றவும், கரையில் இருந்து கடலுக்குள் இறக்கவும் 3 முதல் 4 நாள்கள் வரைப் பிடிக்கும்.

இந்த முறையில் படகுகளை கையாளும்போது சேதங்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்த முறை மிகவும் சிரமமானதும் கூட. ஆட்களும் அதிக எண்ணிக்கையில் தேவைப்படுவர்.

இந்த பழைய முறையில் இருந்து மாறி தற்போது காற்று பைகள் மூலம் படகுகளை கடலில் இருந்து எளிதாக கரைக்கு ஏற்றவும், கரையில் இருந்து கடலுக்குள் இறக்கவும் நவீன முறையை தூத்துக்குடியை சேர்ந்த படகு கட்டும் நிறுவன உரிமையாளர் ஆர். அந்தோணியப்பா என்பவர் அறிமுகம் செய்துள்ளார்.

இந்த முறையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட 70 டன் எடையும், 100 அடி நீளமும் கொண்ட பிரமாண்ட விசைப்படகு இந்த நவீன காற்று பைகள் மூலம் நேற்று கடலில் இறக்கப்பட்டது. இந்த முறையில் படகுகளை கடலில் இறக்கவும், ஏற்றவும் 5 பெரிய காற்று பைகள் பயன்படுத்தப்படுகின்றன.

படகுக்கு அடியில் இந்த காற்று பைகளை வைத்து, படகு எடைக்கு தகுந்தாற்போல அதில் கம்பரசர் மூலம் காற்று அடைக்கப்படுகிறது. பின்னர் படகு பொக்லைன் இயந்திரம் மூலம் இழுக்கப்படுகிறது. படகு சற்று தொலைவுக்கு நகர்ந்ததும், பின்னால் வெளியே வரும் காற்று பையை எடுத்து முன்னால் போட்டு காற்று நிரப்பப்படுகிறது. இவ்வாறு காற்று பைகளை மாற்றி, மாற்றி படகு நகர்த்தப்படுகிறது.

இந்த முறையில் படகுகளை ஏற்றி இறக்க குறைந்தது ஒரே நாளில் படகை ஏற்றி, இறக்கிவிடலாம். மேலும், படகில் எந்த சேதமும் ஏற்படாது. பாதுகாப்பாக கையாள முடியும்.

பழைய முறையில் படகை ஏற்றி, இறக்க கடல் பகுதியில் குறிப்பிட்ட ஆழம் இருக்க வேண்டும். ஆனால், காற்று பை முறையில் எந்த ஆழத்திலும் படகை கடலில் ஏற்றி, இறக்க விடலாம்.

இந்த நவீன காற்று பைகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். அப்போ, மேட் இன் சைனாவா? என்று வாயைப் பிளப்பவர்களும் இருக்கிறார்கள். மேக் இன் இந்தியா என்ன ஆயிற்று? என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கிறார்கள்.

இந்த முறை இந்தியாவில் தூத்துக்குடியில் தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. படகு இறக்குவதை நேற்று ஏராளமான மீனவர்கள் கூடி நின்றுப் பார்த்தனர்.

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தின் மிகப்பெரிய தொகுதி சோழிங்கநல்லூர்.. 2.18 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..