
தூத்துக்குடியில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வீடுகளை இழந்த 200 பேருக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்ட ஆணையை ஒட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் 55 முதல் 59 வார்டு வரையிலான பகுதிகள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பெரிதும் சேதமாகி பாதிக்கப்பட்டன. அந்த சேதத்தில் பல்வேறு மக்கள் வீடுகளை இழந்தனர்.
அந்த மக்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் புதிய வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு புதிய வீடு கட்ட அனுமதியளித்து ஆணை வழங்கும் விழா நேற்று எம்.சவேரியார்புரத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு குடிசைமாற்று வாரிய நெல்லை கோட்ட பொறியாளர் எட்வின்சாம் தலைமை வகித்தார். உதவி பொறியாளர் முனியசாமி முன்னிலை வகித்தார். இந்த விழாவில் உதவி நிர்வாக பொறியாளர் ஜேம்ஸ் வரவேற்றுப் பேசினார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் கலந்து கொண்டு 200 பேருக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகளை கொடுத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் ராமகிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வி.பி.ஆர்.சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.
விழாவின் முடிவில் உதவி பொறியாளர் செந்தில் நன்றித் தெரிவித்தார்.