
நெல்லை மாவட்டத்தில் வருகிற 3-ஆம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் தொடங்குகிறது என்றும், ஜூலை மாதத்துக்குள் நேர்காணலுக்கு வரவில்லை என்றால் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும் என்றும் ஆட்சியர் கருணாகரன் செய்திக்குறிப்பில் தெரிவித்து இருந்தார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “நெல்லை மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு இந்த ஆண்டுக்கான நேர்காணல் வருகிற 3-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேர்காணலுக்கு வர வேண்டும்.
நேர்காணலின்போது கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்:
ஓய்வூதிய புத்தகம், ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு எண், ரேசன் அட்டை ஆகிய ஆவணங்களின் அசல், நகல் கொண்டு வர வேண்டும்.
வருமான வரி செலுத்தும் நிலையில் உள்ள ஓய்வூதியர்கள் நிலையான வருமானவரி கணக்கு அட்டை (பான் அட்டை) கொண்டு வரவேண்டும்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் திருமணம், மறுமணம் செய்ததற்கான சான்று ஆகியவற்றுடன் நேரில் வர வேண்டும். தற்போது “ஜீவன் பிரமான்” (www.jeevanpraman.gov.in) என்ற இணையதளம் வழியாக சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமல் ஆதார் எண் பதிவு செய்து நேர்காணலை மேற்கொள்ள இந்த ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேர்காணலுக்கான இந்த வசதியை அரசு இ.சேவை, பொது சேவை மையங்களை பயன்படுத்தி கொள்ளலாம். நேர்காணலுக்கு வர முடியாதவர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உரிய படிவத்தில் வாழ்நாள் உயிர் சான்று அளிக்க வேண்டும்.
மேற்கண்ட வாழ்நாள் உயிர் சான்றுக்கான மாதிரி படிவத்தை (www.tn.gov.in.karuvoolam) என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வருகிற ஜூன் மாதத்துக்குள் நேர்காணல் மற்றும் உயிர் வாழ் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்காதவர்களுக்கு வருகிற ஆகஸ்டு மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.