அதிநவீனமாகப் போகுது நம்ம ஊரு போலீஸ்? அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா? ஆய்வு கூட தொடங்கியாச்சு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 11, 2018, 9:03 AM IST
Highlights

தமிழ்நாட்டில் உள்ள சிறந்த காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து அதன் தரத்தை உயர்த்தி முன்மாதிரியான காவல் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட ஆய்வை தமிழக நிலம் அபகரிப்பு சிறப்புத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தொடங்கியுள்ளார்.
 

மத்திய அரசு சார்பில் முன்மாதிரியான காவல் நிலையங்களை உருவாக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முதற்கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பாக செயல்படும் காவல் நிலையங்களை ஆய்வு செய்து தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர காவல் நிலையம், திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவரங்கம் காவல் நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகர காவல் நிலையம் என தமிழ்நாட்டில் மொத்தம்  மூன்று காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 

இந்த மூன்று காவல் நிலையங்களையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் பொறுப்பை நிலம் அபகரிப்பு சிறப்புத் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளரான நாகஜோதியிடம் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதன்படி, மூன்று காவல் நிலையங்களையும் காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். 

அதன்பிறகு மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள காவல் அதிகாரிகள் குழு ஒன்று புதுடெல்லியில் இருந்து வந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று காவல் நிலையங்களில் இருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பர். 

அதன்படி, நேற்று காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஆய்வு நடத்தினார். காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலாளர்களின் செயல்பாடுகள், காவல் நிலையத்தின் சுற்றுப்புறச் சூழல், குற்ற வழக்குகளின் நிலுவை, பதிவேடு பராமரிப்பு போன்றவற்றை ஆய்வு செய்தார். 

மீதமுள்ள இரண்டு காவல் நிலையங்களையும் ஆய்வு செய்த பிறகு அது தொடர்பான அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பார் என்றும், பின்னர் புதுடெல்லியில் இருந்து வரும் காவல் அதிகாரிகள் ஒரு காவல் நிலையத்தை தேர்ந்தெடுப்பர் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!