கடல் வழியாக இலங்கைக்கு மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தல்; தப்பியோடிய கடத்தல்காரர்களுக்கு வலைவீச்சு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 11, 2018, 7:54 AM IST
Highlights

புதுக்கோட்டையில் உள்ள ஜெகதாப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற 250 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.50 இலட்சம் இருக்குமாம். தப்பியோடிய கடத்தல்காரர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் என்னுடம் இடத்தில் இருந்து நாள்தோறும் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்கின்றனர். இதில், "ஜெகதாப்பட்டினம் கடல் பகுதியில் கஞ்சா கடத்தப்படுகிறது" என்ற தகவல் கடலோர காவல் குழுமத்திற்கு கிடைத்தது.

அந்த தகவல் உண்மைதானா? என்று உறுதிப்படுத்திக்கொள்ள காவல் குழும ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் இரகுபதி, இராஜ்குமார், ஜவஹர், காவலாளர்கள் பாரதிதாசன், இரங்கநாதன், பாண்டியன் ஆகியோர் ஜெகதாப்பட்டினத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது ஜெகதானப்பட்டினத்தின் கடலோரப் பகுதியில் ஃபைபர் படகில் சிலர் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தனர். ரோந்தில் ஈடுபட்டிருந்த காவலாளர்கள் தங்களை நெருங்குவதைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின்னர் படகின் அருகில் சென்ற காவலாளார்கள் அதை சோதனையிட்டனர்.

அதில், மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பதை கண்டு காவலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் எட்டு மூட்டைகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த காவலாளர்கள், அதன் எடை 250 கிலோ  இருக்கும் என்றும், மதிப்பு ரூ.50 இலட்சம் இருக்கும் என்றும் தெரிவித்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகையும் காவலாளர்க பறிமுதல் செய்தனர்.

பின்னர், இதுகுறித்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படுகிறது என்று தெரிந்தது. இதுகுறித்து சிவகங்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவலாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் மாரீஸ்வரி மற்றும் காவலாளர்கள் கஞ்சா மூட்டைகளை எடுத்துச் சென்றனர்.

கஞ்சா கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிந்த மணமேல்குடி கடலோர காவல் குழுமத்தினர் தப்பியோடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

click me!