சென்னையில் நாளை நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தின விழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்
தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை மூன்றாம் ஆண்டாக ‘தமிழ் வெல்லும்’ என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது.
சென்னை நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர் பெருமக்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வெளிநாடுகளில் வாழும் 1400-க்கும் மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்பதற்குப் பதிவுகள் செய்துள்ளனர். இதில், 218 சர்வதேசச் தமிழ் சங்கங்கள் 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள். இந்த இரண்டு நாள் நிகழ்விலும் பங்கேற்கிறார்கள்.
முதல் நாளான ஜனவரி 11ஆம் தேதி (நாளை) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்புரை ஆற்றுகிறார். அத்துடன், அங்கு அமைக்கப்பட்டுள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட அயலகத் தமிழர் கண்காட்சி அரங்குகளையும் அவர் திறந்து வைக்கவுள்ளார். மேலும், கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டுச் சிறப்பு நேர்வாக அயலகத் தமிழர்களின் புத்தக வெளியீடு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக நான்கு கலந்துரையாடல்களும் ஒரு கவியரங்கமும் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நாளான ஜனவரி 12ஆம் தேதி (நாளை) முதல்வர் ஸ்டாலின் விழாப்பேருரை நிகழ்த்துவதுடன் ‘எனது கிராமம்’ என்னும் முன்னோடித் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் தாங்கள் பிறந்த கிராமத்தை மேம்படுத்த விரும்பும் அயலகத் தமிழர்கள் அதற்குரிய நிதியை அளித்து இத்திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்த வகை செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தலைமை விருந்தினராகப் பங்கேற்கவுள்ளார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிஜி, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 57 அயலகத் தமிழ் மாணவர்கள் தாங்கள் பண்பாட்டுச் சுற்றுலா சென்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, மகளிர் நலன், வணிகம், தொழில்நுட்பம், விளையாட்டு, மருத்துவம் ஆகிய 8 பிரிவுகளில் அயலகத் தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகள் வழங்கவுள்ளார்.
முதல் நாளின் தொடர்ச்சியாக இரண்டு கலந்துரையாடல்கள் இரண்டாவது நாளில் நடைபெறவுள்ளது. தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இரண்டு நாள்களிலும் நாட்டுப்புற இயல், இசை, நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
தமிழர் மரபு மற்றும் பண்பாடுகளை விளக்கும் வகையில் தமிழர் நலன், தமிழர் கலை பண்பாடு, வணிகம், தமிழின் தொன்மை, தொடர்ச்சி, சர்வதேசத் தமிழ்ச் சங்கம் என்னும் கருப்பொருள்கள் வாரியாகக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசு ரூ.1000: முதல்வர் அறிவிப்பின் பின்னணியில் சின்னவர்!
தமிழர் கலை பண்பாடு மற்றும் வணிகத்தை விளக்கும் அரங்குகளும், தமிழின் தொன்மை மற்றும் தொடர்ச்சி குறித்து தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் தொல்லியல் துறை, தமிழ் இணையக் கழகம், இலங்கை தமிழ்க் கலை கண்காட்சி, அரங்குகளும், சர்வதேசத் தமிழ்ச் சங்கங்கள் கண்டங்கள் வாரியான அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன், முதல்வரின் கனவுத்திட்டமான “நான் முதல்வன்” திட்டம் மற்றும் சிப்காட், வழிகாட்டி (கைடன்ஸ்), டிட்கோ, சிட்கோ உள்ளிட்ட துறைகளின் காட்சி அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா வளர்ச்சித் துறை மற்றும் பூம்புகார், தமிழ் வளர்ச்சித் துறை, கோ ஆப்டெக்ஸ், அயலக நலத்துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் காட்சி அரங்குகளும் இடம்பெற்றுள்ளன.
வெளிநாடு வாழ் தமிழர்கள் இங்கு முதலீடுகள் செய்வதற்கான வசதி வாய்ப்புகளை குறித்து விளக்குவதற்காக ஸ்டார்ட் அப், டிஎன் ஃபேம் உள்ளிட்ட கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளனர்.