திமுக இளைஞர் அணி மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்
திமுக இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு சேலத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2007ஆம் ஆண்டு திருநெல்வேலியில் திமுக இளைஞர் அணியின் முதல் மாநாடு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த நிலையில் திமுகவில் இளைஞர் அணியின் 2ஆவது மாநில மாநாடு திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, மாவட்டந்தோறும் பயணம் செய்து உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி அழைப்பு விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், மாநில உரிமைகளை மீட்க வலியுறுத்தி சேலத்தில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி 2ஆவது மாநில மாநாட்டை ஒட்டி மாபெரும் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கன்னியாகுமரியில் வருகிற 15ஆம் தேதி (நாளை) காலை 11.15 மணியளவில் தொடங்கி வைக்கவுள்ளார். குமரி திருவள்ளுவர் சிலை அருகே நாளை தொடங்கும் பேரணி நவம்வர் மாதம் 27ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
திமுக ரைடர்ஸ் பிரசாரக் குழுவினர் மேற்கொள்ளும் இந்த பேரணியில் கலந்து கொள்பவர்களுக்கு மூன்று வேளை உணவு, தங்குமிடம், தலைக்கவசம், கொள்கை முழக்க டி ஷர்ட், டிராவல் பேக், முதலுதவி கிட் குடிநீர் என எல்லாவிதமன அடிப்படை வசதிகளும் திமுக இளைஞரணி சார்பில் செய்துக் கொடுக்கப்படுகிறது.
போதையை ஒழிக்காமல் புதிய விடியல் பிறக்காது: ராமதாஸ் சாடல்!
தமிழகம் முழுவதும் 8647 கிலோ மீட்டர் பயணித்து, சுமார் 3 லட்சம் இளைஞர்களை நேரில் சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது. மொத்தம் 188 இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் திமுக ரைடர்ஸ் பிரசாரக் குழு, 38 மாவட்டங்களில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பயணிக்கவுள்ளனர். இந்த மாவட்டங்களானது வள்ளுவர் மண்டலம், பெரியார் மண்டலம், அண்ணா மண்டலம், கலைஞர் மண்டலம் என பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணிக்கிடையே, 504 இடங்களில் பிரச்சார முனையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 38 இடங்களில் தெரு முனைப் பிரசாரக் கூட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.