
வேலூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரும், இவரது மனைவி யாமினி மற்றும் மகன் கோகுல் ஆகியோர் சோளிங்கருக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
வாலாஜாப்பேட்டை அடுத்த பெருங்காஞ்சி என்ற இடத்தில் வந்தபோது, முன் சென்ற லாரியை வெங்கடேசன் முந்த முயன்றுள்ளார்.
அப்போது எதிர்பாரத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது வெங்கடேசனின் வாகனம் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வெங்கடேசன், யாமினி, மற்றும் கோகுல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த பாபு என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.