
வேட்டவலம்
திருவண்ணாமலையில் நடைப்பெற்ற மண்டல அளவில் பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகளில் வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு வெற்றிகளைக் குவித்து அசத்தினர்.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மண்டல அளவில் பள்ளி மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடந்தன. இதில் வேட்டவலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஜூனியர் பிரிவில் இந்த பள்ளி மாணவி கார்த்திகா நீளம் தாண்டுதலில் 3–ம் இடமும், சீனியர் பிரிவில் மீனா 800 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 300 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டத்தில் 2–ம் இடமும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 3–ம் இடமும் பெற்றனர்.
சூப்பர் சீனியர் பிரிவில் மோகனப்பிரியா 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதலில் 2–ம் இடமும், 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் 3–ம் இடமும் பெற்றார். அதேபோல் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கிருபா, தேவதர்ஷினி, சத்யா, கவுதமி ஆகியோர் 2–ம் இடம் பிடித்தனர்.
போட்டிகளில் முதல், 2–ம் இடம் பிடித்த மாணவிகள் டிசம்பர் மாதம் விருதுநகரில் நடைபெறும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
தடகள போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் பாலமுருகன், உதவி தலைமையாசிரியர் ராஜி, முருகையன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன், அந்தோனிகுமார் மற்றும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவ, மாணவிகள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்கள்.