
கள்ளக்காதலை கைவிடாததால், கர்நாடகாவைச் சேர்ந்த பெண் இன்ஜினியரை அடித்து கொலை செய்து, தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் வனப்பகுதியில், கடந்த மாதம் 6ம் தேதி, இளம்பெண் ஒருவர் கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனையில், அந்த பெண் கொலை செய்யப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே தனது மகள் ஹர்ஷிதா மாயமாகி விட்டதாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சம்மங்கிராமம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், கர்நாடக போலீசார் சூளகிரியில் வந்து விசாரணை நடத்தினர். உடல் பாகங்களை ஆய்வு செய்ததில், கொலையுண்டது ஹர்ஷிதா வயது 3௦ என தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர் சந்திரகாந்த் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, மனைவியை கொன்று எரித்ததை ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது;
சந்திரகாந்த்துக்கும், ஹர்ஷிதாவுக்கும் 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆகி, 5 வயதில் ஒரு மகன் உள்ளார். சந்திரகாந்த் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பெங்களூருவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக பணியாற்றி வந்த ஹர்ஷிதாவுக்கு சக ஊழியருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கணவர் சந்திரகாந்த்க்கு தெரியவர இதை தட்டிக்கேட்டதால், தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரகாந்த், சரமாரியாக தாக்கியதில் ஹர்ஷிதா இறந்து விட்டார். பின்னர், தனது நண்பர் ரவீந்தர்சிங் உதவியுடன், தமிழக வனப்பகுதியான கோபசந்திரத்திற்கு ஹர்ஷிதாவின் உடலை காரில் கொண்டு வந்து, தீயிட்டு எரித்து விட்டு சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.