
சென்னையில் பேருந்து ஓட்டுநர்களின் அலட்சியத்தால் இன்று மட்டுமே சென்னையில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற பெண் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று சென்னை மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இவர் வந்த பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்ளே நுழைந்தபோது, அங்கிருந்த வேகத்தடையின் மீது டிரைவரின் அலட்சியத்தால் வேகமாக ஏறியது.
இதில் பேருந்தில் அமர்ந்திருந்த சுமதி உள்ளேயே வேகமாக தூக்கி வீசப்பட்டார். இதனால் சுமதி சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் நடைபெற்று முடிந்த சில மணி நேரங்களில் மற்றொரு அரசு பேருந்து டிரைவரின் அலட்சியத்தால் ஒரு மாணவரின் உயிர் போயுள்ளது.
திருவல்லிக்கேனியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து சாலை விதிகளை கடைபிடித்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அரசு பேருந்து ஒன்று டிரைவரின் அலட்சியத்தால் விக்னேஷின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதையடுத்து விக்னேஷின் வாகனம் சரிந்து விழுந்த்து.
இதில் பேருந்தின் அடியில் விக்னேஷ் சிக்கியதால் பேருந்தின் பின்புறம் டயர் அவரின் மார்பின் மேல் ஏறியது. உயிருக்கு போராடிய விக்னேஷை அங்கிருந்த போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுபோன்ற டிரைவர்களின் அலட்சியபோக்கால் அடுத்தடுத்து உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறிவருவதால் மக்கள் பெரிதும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டிரைவர்களின் இத்தகைய அலட்சிய போக்கிற்கு என்ன காரணம் என தொழிற்சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாகி விட்டதாகவும், இதனால் டிரைவர்களுக்கு நாளுக்கு நாள் மன நெருக்கடி அதிகமாவதாக கூறினர்.
மேலும் டிரைவர்களுக்கு மனநல நிபுணர்கள் கவுன்சிலிங் கொடுப்பது அவசியம் எனவும் பெரும்பாலான அரசு பேருந்துகளில் உதிரி பாகங்கள் சரியில்லாததால் அவற்றை சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.