
வேலூர்
ஆந்திர காட்டுப் பகுதியில் ரூ. 40 இலட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கைப்பற்றிய ஆந்திர காவலாளர்கள் இது தொடர்பாக வேலூரைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். காட்டுப் பகுதிக்குள் தப்பியோடிய முப்பதுக்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், காஜிபேட்டா சேஷாசல வனப்பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு காவலாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் செம்மரக் கட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.அதனைக் கண்ட காவலாளர்கள் அவர்களை அனைவரையும் சுற்றி வளைத்தனர். ஆனால், அவர்கள் செம்மரக்கட்டைகளை போட்டுவிட்டு அங்கிருந்து காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.
அந்த கும்பலை விரட்டிச் சென்ற காவலாளர்கள், அவர்களில் இருவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். ரூ. 40 இலட்சம் மதிப்புள்ள 26 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் தாலூக்கா ஜவ்வாதுமலையில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (26), வடிவேலு (23) என்பது தெரிய வந்தது.
தப்பியோடிய 30-க்கும் மேற்பட்டோரை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். செம்மரக்கட்டைகள் யாருக்காக கடத்தப்பட்டது? என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.