
தமிழகம் முழுவதும் ப்ளஸ்-2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. 9 லட்சத்து 30 ஆயிரம் மாணவ - மாணவிகள் தேர்வை எழுதுகின்றனர். முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளதுடன், தேர்வு மைய வளாகத்திற்குள் மாணவர்கள் செல்போன்களை எடுத்துச் செல்லக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேல்நிலைப் பொதுத் தேர்வு நாளை முதல் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் இருந்து 4 லட்சத்து 17 ஆயிரத்து 952 மாணவர்களும், 4 லட்சத்து 80 ஆயிரத்து 810 மாணவிகளும், தேர்வு எழுதுகின்றனர்.
இதுதவிர 3-ம் பாலினத்தவர் ஒருவரும், தனித் தேர்வர்களாக 31 ஆயிரத்து 843 பேரும், சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் பங்கேற்கின்றனர்.
ப்ளஸ்-2 தேர்வுக்காக 2 ஆயிரத்து 427 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் காப்பி அடிப்பதைத் தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடைபெறும் பொதுத் தேர்வில் 24 ஆயிரத்து 851 மாணவர்களும், 28 ஆயிரத்து 721 மாணவிகளும் என மொத்தம் 53 ஆயிரத்து 572 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தனித் தேர்வர்கள் 2 ஆயிரத்து 857 பேரும், தட்கல் மூலம் 696 பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.
தேர்வுகளின்போது முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் ஆய்வு அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படையினர் 275 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசிகளை மாணவர்களும் மற்றும் தனித் தேர்வர்களும் கண்டிப்பாக எடுத்துச் செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.