
கரூரில் 41 உயிர்களை காவு வாங்கிய கூட்ட நெரிசல் தொடர்பாக தவெகவின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், இணைச்செயலர் சி.டி. நிர்மல் குமார் ஆகியோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களை மீட்பதற்காக கூட்டத்துக்கு நடுவே ஆம்புலன்ஸ்கள் சென்றன. திமுக அரசு வேண்டுமென்றே கூட்டத்துக்குள் காலியான ஆம்புலன்ஸ்களை அனுப்புவதாக கருதிய தவெக தொண்டர்கள் சிலர் ஆம்புலன்ஸ் ஓட்டுரை சரமாரியாக தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோவை வைத்து ஓட்டுநரை தாக்கியவர்களை காவலர்கள் தேடி வந்தனர்.
ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய விவகாரத்தில் சேலத்தை சேர்ந்த த.வெ.க. உறுப்பினரான மணிகண்டன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கிய வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கரூர் பிரசார கூட்டத்தின் பொறுப்பாளரும், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளருமான வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதியழகனுக்கு 2 நாள் போலீஸ் காவல்
அவர் மீது கொலை மிரட்டல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக கூட்ட நெரிசல் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கும்படி சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது நீதிமன்றம் மதியழகனை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.