கபட நாடக அரசு.. யாருக்காக இந்த ஆட்சி? திருத்தணி சம்பவத்தால் டென்ஷனான தவெக விஜய்!

Published : Dec 30, 2025, 03:46 PM IST
TVK Vijay

சுருக்கம்

சென்னையிலிருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு நடிகர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதாக திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலில், ஒரு இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கியது. தாக்குதல் நடத்தியவர்கள் அந்தச் சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' ஆகப் பதிவிட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய், இது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு மீது சரமாரி விமர்சனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள விஜய், ஆளும் திமுக அரசை நோக்கிப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

"சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழகம் எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடும் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது" என்று விமர்சித்துள்ளார்.

 

 

கபட நாடக அரசு

ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

"சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருட்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழகத்தில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டுசெல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க, ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசை 'கபட நாடக அரசு' என்று கடுமையாகச் சாடியுள்ள அவர், “எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருட்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

2026 குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்திக்கு ஓகே சொன்ன மத்திய அரசு!
பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த தமிழக அரசு..? திட்ட அறிக்கை சமர்ப்பித்த குழு