
தேவைப்படுவோருக்கு உதவ இரக்கமுள்ள நெஞ்சங்கள் இன்னுமும் இருக்கத்தான் செய்கின்றன. சென்னையில் “ஐயமிட்டு உண்” என்ற சமூதாய பிரிட்ஜ் தொடங்கப்பட்டதைப் போல், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலக்தில் “அட்சயப்பாத்திரம்” சமுதாய பிரிட்ஜ் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆணையர் அல்பே ஜான் வர்கீஸ் இந்த சமுதாய பிரட்ஜை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்த பிரிட்ஜ் தொடங்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள், தேவை உள்ளவர்களுக்கு உதவும் உள்ளங்கள் உணவுப்பொருட்களை கொண்டு வந்து அடுக்கிவிட்டன.
அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், பசியாற்ற நினைப்பவர்கள் , இந்த அட்யப்பாத்திரம் பிரிட்ஜில் உணவுகளை விட்டுச் செல்லலாம். தேவைப்படுவோர் இந்த பிரிட்ஜில் இருந்து உணவுப்பொருட்களை எடுத்து பசியாறிக் கொள்வார்கள்.
வற்றாத பாத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அட்சயப்பாத்திரம் என்ற பெயருடன் இந்த பிரிட்ஜ் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இதுபோல் சென்னையில் “ஐயமிட்டு உண்” என்று பெசன்ட் நகரில் ஒரு சமுதாய பிரிட்ஜும், கோவையில் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. மூன்றாவதாக தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பிரிட்ஜை ஒரு சூப்பர் மார்க்கெட் அன்பளிப்பாக அளித்துள்ளது. மேலும், பல்வேறு நல்ல உள்ளங்கள் இந்த பிரிட்ஜின் பராமரிப்பு செலவை ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
சோதனை முயற்சியாக மாநாகராட்சி அலுவலகத்தில் முதல் சமுதாய பிரிட்ஜ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் வெற்றிபெற்றால், அடுத்தடுத்து தூத்துக்குடியின் முக்கிய பகுதிகளில் இதுபோல் சமுதாய பிரிட்ஜ் தொடங்கப்படும் என்று ஆணையர் ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
மாநகராட்சி அலுவலகத்தில் இந்த சமுதாய பிரிட்ஜ் வைக்கப்பட்டதன் நோக்கமே, தரமான உணவுப்பொருட்கள் வைக்கப்படுகிறதா என்பதை நேரடியாக கண்காணிக்கவே ஆகும். மேலும், ஓட்டல்கள், கேட்ரிங் சேவை செய்பவர்கள், விருந்து, விசேஷங்கள் நடத்துபவர்களுக்கும் இந்த சமுதாய பிரிட்ஜ் குறித்து அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு, மீதமாகும் உணவுப்பொருட்களை, தேவைப்படுவோருக்கு கொடுக்க இங்கு வந்து வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மக்கள் உணவுகளை தானமாக கொடுக்க விரும்புவர்கள், தேவை உள்ளவர்களைத் தேடி அலைய வேண்டாம், இந்த சமுதாய பிரிட்ஜில் வைத்தால் உரியவர்களுக்கு சென்று சேரும் என்று ஆணையர் அல்போன்ஸ் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
மண்ணில் போட்டு வீணாக்கும் உணவுகளை மனிதர்களுக்கு கொடுத்தால், மனிதம் சாகாமல் காப்பாற்றலாம். அதற்கு இதுபோன்ற சமுதாய பிரிட்ஜ் மனிதம் மரிக்காமல் இருக்க நீராகப் பாயும் என்பதில் ஐயமில்லை.