
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்தவர்களுக்கு தூத்துக்குடி மக்கள் நன்றி கூறினர். மேலும் எங்கள் சந்ததிகள் வாழ வழிவகுத்த அவர்களுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவர்கள் என்றும் அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. ஆட்சியர் சந்துப் நந்தூரி முன்னிலையில் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே மின்சாரம், குடிநீர் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறும்போது;
20 வருஷமா நாங்க போராடினோம். எங்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைச்சிருக்கு. ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால், சுத்தமான காற்று எங்களுக்கு கிடைக்கும். எங்க பூமி எங்களுக்கு கிடைச்சிருக்கு.
100-வது நாள் பேரணி குறித்து ஏற்கனவே நாங்கள் அறிக்கை விட்டிருந்தோம். அப்போது 144 தடை உத்தரவு போடாமல் இருந்திருந்தால், இந்த உயிர்பலி நடந்திருக்காது.
உயிரை இழந்த வேதனையோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆலை மூடப்பட்டதற்கு நன்றி. ஆலை மூடப்பட்டது நிரந்தரமாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்னர்.