
திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை இடுவாய் கிராமத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசின் நகர்ப்புற நிர்வாகத் தோல்வியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக, இடுவாய் கிராம மக்களும் பாஜகவினரும் 'கருப்பு தினம்' அறிவித்துள்ளனர். இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளத்தில், "பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறாக குப்பைக்கிடங்கு அமைக்கும் முயற்சி, மக்கள் குரலை மதிக்காத திமுக அரசுக்கான வலுவான எச்சரிக்கை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இடுவாய் மக்களின் இந்த ஜனநாயகப் போராட்டத்திற்குக் கருப்பு கொடி ஏந்தி தனது ஆதரவைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அளவிலான நகரங்களின் தூய்மைப் பட்டியலில் தமிழக நகரங்கள் பின்தங்கியிருப்பதை அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்திய அளவில், 10 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் தூய்மை பட்டியலில், சென்னை 38ஆவது இடத்திலும், கோவை 28ஆவது இடத்திலும் இருப்பதும், அதே பட்டியலில் மதுரை மிகவும் அசுத்தமான நகரமாக கடைசி இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருப்பதும் திமுக அரசின் நகர்ப்புற நிர்வாகத் தோல்வியை வெளிப்படுத்துகிறது. மேலும், 3 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 95 நகரங்களில், திருப்பூர் 77ஆவது இடத்திலும், ஈரோடு 94ஆவது இடத்திலும் இருப்பது வெட்கக்கேடான நிலை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
"இந்த அவல நிலைக்குக் காரணமான திமுகவின் கமிஷன் அரசியலை மறைக்க, சுற்றுவட்டார கிராமங்களில் குப்பைகளைக் கொட்டி, திருப்பூரையே குப்பை நகரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இடுவாய் கிராம மக்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது." என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இடுவாய் மக்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு பாஜக துணை நிற்பதாகக் கூறியுள்ள அண்ணாமலை, “அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத இந்த மக்கள் குரல், வரும் தேர்தலில் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் தீர்ப்பாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.