ஆளுங்கட்சியினரின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகை - ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்த டிடிவி

By Ajmal KhanFirst Published Dec 12, 2023, 1:37 PM IST
Highlights

ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவித்த நிவாரணத் தொகை முழுமையாக சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை வெள்ள பாதிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் புரட்டி போட்டது. இந்த புயலால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் வெள்ள நிவாரண இழப்பீடாக தமிழக அரசு நிவாரண உதவி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். புயல் கடந்து சென்றாலும் அதன் தாக்கம் இன்றளவும் குறையவில்லை என்பதற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, நசரத்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வடியாமல் இருக்கும் மழைநீரே சிறந்த உதாரணம்.

Latest Videos

நிவாரணத்தொகை அறிவிப்பு

புயல், வெள்ள பாதிப்பால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்க அரசு அறிவித்திருக்கும் 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை போதுமானதாக இருக்காது என பொதுமக்கள் வைத்துள்ள குற்றச்சாட்டு ஒரு புறமிருக்க நியாய விலைக்கடைகள் மூலமாக விநியோகிக்கப்படும் நிவாரணத் தொகை ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இன்றி முழுமையாக கிடைக்குமா? என்ற கேள்வியும் அச்சமும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமல்லாமல், குடும்ப அட்டை இல்லாதவர்கள், குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்து காத்திருப்பவர்கள், வீடுகளின்றி சாலையோரங்களில் தங்கியிருக்கும் குடும்பத்தினருக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அனைத்து மக்களுக்கும் நிவாரண தொகை

எனவே, ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடின்றி அரசு அறிவித்திருக்கும் நிவாரணத் தொகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதோடு, குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

மிக்ஜாம் புயலால் பாதிப்பு.! சென்னையை மீட்டெடுத்த தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை- ஸ்டாலின் பாராட்டு
 

click me!