
சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாகவும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் அதிமுக, பாஜக நேற்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. பாஜகவில் பியூஸ் கோயல் தலைமையிலும், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக, ஓபிஎஸ் வர உள்ளது என முடிவெடுக்கப்பட்டதகாவும், பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு அதிமுக தொகுதிகளை ஒதுக்கியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
அதாவது பாஜகவுக்கு 23, பாமகவுக்கு 23, தேமுதிகவுக்கு 6, அமமுகவுக்கு 6 என தொகுதிகளுக்கான பட்டியலை இபிஎஸ் பியூஸ் கோயலிடம் கொடுத்து விட்டதாகவும் தகவல்கள் கூறின. இந்த நிலையில், இதை மறுத்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாங்கள் இன்னும் கூட்டணி குறித்தே முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ''அமமுக தன்மானத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். வெற்றி, தோல்விகளை கடந்து 8 ஆண்டுகளாக அரசியல் களத்தில் அசைக்க முடியாத சக்தியாக உள்ளோம். 200 தொகுதிகளில் அமமுக பலமாக உள்ளது. பல மாவட்டங்களில் எங்களின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் எங்களை தவிர்த்து யாரும் வெற்றி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. எங்கள் இயக்கத்துக்கு என்ன முடிவு தேவையோ அதை எடுப்பேன்.
வதந்தியை யாரும் நம்பாதீர்கள்
யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. எங்களுக்கு என்ன கூட்டணி தேவை என்பதை நாங்கள் முடிவு செய்வோம். எங்களுடன் முக்கிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது உண்மை. ஆனால் கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தமிழக மக்களுக்கு எது சிறந்தது? எங்களுக்கு எது சிறந்தது? என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம். நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிப்பட்டியில் அமமுக தான் போட்டியிடும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பது வெறும் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம்'' என்றார்.
தமிழிசையும் மறுப்பு
இதேபோல் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று தெரிவித்துள்ளார். ''தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வரும் செய்தியில் உண்மை இல்லை. இது முற்றிலும் வதந்தி. இந்த குழப்பங்களை தாண்டி திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஒரே நோக்கம்'' என்று தெரிவித்தார்.