மகளிருக்கு உரிமைத் தொகை.. அவசரகதியில் செயல்படுத்த துடிக்கும் திமுக - TTV தினகரன் கடும் சாடல்!

By Ansgar R  |  First Published Jul 8, 2023, 4:13 PM IST

நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இந்தத் திட்டத்தை அவசரகதியில் திமுக செயல்படுத்தத் துடிப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர் - டிடிவி தினகரன்


ஆட்சியில் உள்ள திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதும், இல்லத்தரசிகளை பெரிதும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய ஒன்றும் தான் மகளிருக்கு உரிமைத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்குதல். இதை கடந்த 2021ம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து, எப்போது இதை நிறைவேற்ற போகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.
 
இந்நிலையில் இதற்காக சுமார் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பட துவங்கும் என்று அப்போதைய நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். அதே போல மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் என்று முன்பு கூறியதை, பிறகு தகுதி வாய்ந்த மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டதும் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் யார் யாருக்கெல்லாம் இந்த உரிமை தொகை கிடைக்கும், அதற்கு என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அதை எங்கெல்லாம் பதிவு செய்ய முடியும் என்பது குறித்து வெளியான தகவல்கள் தற்போது மாபெரும் விவாத பொருளாக மாறி உள்ளது. தற்பொழுது இது குறித்து அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஒரு கடுமையான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு..

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள் : திமுக அமைச்சர்கள் ITக்கும், அமலாக்கத்துறைக்கும் பயந்து இரவில் தூங்காமல் இருக்கின்றனர் - செல்லூர் ராஜூ

"அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்ததற்கு நேர்மாறாக தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது தகுதிப்படைத்த மகளிர் யார் என்ற அறிவிப்பை முதலமைச்சர் திரு.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

நியாயவிலை கடைகளில் முகாம் அமைக்கப்படும், அங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும், ஆதார் அட்டை,ரேஷன் அட்டை இல்லாத தகுதிவாய்ந்த மகளிரை அதிகாரிகள் கண்டறிய வேண்டும் என்றெல்லாம் உத்தரவிட்டிருப்பது இந்தத் திட்டத்தை ஆளும்கட்சியினரின் தலையீடு இல்லாமல் முறையாக செயல்படுத்த முடியுமா? என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க ஆட்சி மீது எழுந்த அதிருப்தியை சரி செய்யவும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெறுவதற்காக மக்களின் வரிப் பணத்தில் இந்தத் திட்டத்தை அவசரகதியில் திமுக செயல்படுத்தத் துடிப்பதாகவே பொதுமக்கள் கருதுகின்றனர்.

அறிவிப்பது ஒன்றும், செயல்படுத்துவது வேறாகவும் இருப்பதே திமுக அரசின் பாரம்பரிய நடைமுறை என்பது இந்த விஷயத்திலும் வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆகவே வாக்குறுதி அளித்தபடி, மக்களை ஏமாற்றாமல் தெளிவான திட்டத்தோடு அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகையை நிபந்தனையின்றி வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்."

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக அவர் எழுதியுள்ளார். இதேபோல பாஜகவின் அண்ணாமலையும், மகளிர் உரிமைத்தொகை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத் தொகை - யார் யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது?

click me!