
கோவையில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டி.டி.ஆரை. அதில் பயணம் செய்த பயணிகள் அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கோவையில் இருந்த சென்னை நோக்கி சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. அதில் சென்னையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மனைவி மற்றும் 6 வயது குழந்தையுடன் பயணம் செய்தார்.
அவர்கள் பயணித்த அந்த கோச்சில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அகிலேஷ்குமார் என்பவர் டி.டி.ஆர். ஆக பணியாற்றினார். இந்நிலையில் இன்று அதிகாலை சேரன் எக்ஸ்பிரஸ் ரயில் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே வந்தபோது, அந்த கோச்சில் இருந்த வியாபாரியின் 6 வயது மகளை, தனது இருக்கைக்கு அழைத்துச் சென்றார்.
அதிகாலை என்பதால் அனைவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த சந்தர்ப்பதைப் பயன்படுத்தி, அகிலேஷ் குமார், அந்த 6 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த சிறுமி கூச்சலிட்டதால் விட்டுவிட்டார். அதே நேரத்தில் இந்த சம்பவத்தைப் நேரில் தற்செயலாக பார்த்த பயணி ஒருவர், டி.டி.ஆரை அடிக்கத் தொடங்கினார்.
இதையடுத்து மற்ற பயணிகளும் அகிலேஷ் குமாருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் பிடித்துக் கொடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.