காதல் திருமணம் செய்ததால் பெண்ணை பெற்றவர்களே கடத்தி கொலை செய்ய முயற்சி! கூலிப்படையை வரவழைத்த கொடூரம்...

First Published Mar 28, 2018, 11:21 AM IST
Highlights
Trying to kidnap and kill the girl because of love marriage


டிரைவராக இருக்கும் வாலிபரை காதல் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாததால், தங்களது கவுரவம் போய்விட்டதாக கருதி பெற்ற பெண்ணையே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாயல்குடியை சேர்ந்தவர் ஞானசவுந்தரி கொட்டாரம் தனியார் மருத்துவமனையில் நர்சிங் பயிற்சிக்காக சேர்ந்தார். இவர் பயிற்சியில் இருக்கும்போது அகஸ்தீஸ்வரம் சமாதானபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் சுபாஷ் என்பவர் மருந்து வாங்க மருத்துவமனைக்கு சென்று வந்தபோது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இருவரும் ஒரே சமுகத்தைசேர்ந்தவர்கள் என்றாலும், சுபாஷ் ஏழை என்பதால் ஞானசவுந்தரி வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜனவரி மாதம் திருநெல்வேலிக்கு சென்று பதிவு திருமணம் செய்தனர். பின்னர் இருவரும் சாயல்குடிக்கு சென்றனர்.

அங்கு சென்றபின் ஞானசவுந்தரி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் இது ஊர் பிரச்னையாக மாறியது. இதனால் இருவரும் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 25ம்தேதி இரவு தூத்துக்குடியை சேர்ந்த மார்ட்டின் நிமல், அக்ளின் அமல் ஆகிய இருவரும் ஒரு பைக்கில் சமாதானபுரம் வந்தனர்.  ஞானசவுந்தரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இருவரும் அவரை தடுத்து நிறுத்தி கடத்த முயற்சித்தனர்.

அவர் சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்ததையடுத்து இருவரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி யாராவது அருகில் வந்தால் குத்திவிடுவோம் என மிரட்டினர். தகவல் அறிந்த போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் இருவரும் கூலி படையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இதுகுறித்து ஞானசவுந்தரி போலீசில் நேற்று புகார் அளித்தார்.

அதில், தான் டிரைவராக இருக்கும் வாலிபரை காதல் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாததால், தங்களது கவுரவம் போய்விட்டதாக சொல்லி, என்னை கொலை செய்ய எனது தந்தை, தாய், சித்தப்பா ஆகியோர் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை ஏவி விட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

புகாரின்படி போலீசார் ஞானசவுந்திரியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து, பிடிபட்ட கூலிப்படையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர்.

click me!