தனியார் நிறுவனங்களுக்கு கைமாறப் போகுது பி.எஸ்.என்.எல்! ஊழியர்கள் வன்மையாக கண்டனம்...

First Published May 9, 2018, 7:47 AM IST
Highlights
Trying to hand over bsnl phone service to private companies employees condemned ......


காஞ்சிபுரம்

பி.எஸ்.என்.எல்  தொலைபேசி சேவையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் பி.எஸ்.என்.எல்  தொலைபேசி சங்க ஊழியர்கள் கவன ஈர்ப்பு தெருமுனைக் கூட்டத்தை நடத்தினர். 

பி.எஸ்.என்.எல்  தொலைபேசி சேவையை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முயற்சியைக் கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பி.எஸ்.என்.எல்  தொலைபேசி சங்க ஊழியர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு தெருமுனைக் கூட்டத்தை நேற்று மாலை நடத்தினர். 

மக்களின் வரிப்பணத்தில் உருவான பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தின் வளர்ச்சியை சிதைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்வபடுகிறது என்று இச்சங்கத்தினர் பகிரங்க குற்றம் சாட்டுகின்றனர். 

தனியாகத் துணை நிறுவனம் ஒன்றை உருவாக்கி, அதன்வசம் பி.எஸ்.என்.எல்  நிறுவனத்தின் 66 ஆயிரத்து 707 செல்லிடப்பேசி கோபுரங்களை ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையானது, காலப் போக்கில் சம்பந்தப்பட்ட துணை நிறுவனத்தை ரிலையன்ஸ் ஜியோ போன்ற தனியார் நிறுவனங்களிடம் தாரை வார்க்கும் முதல் முயற்சி என்பதை மக்களிடம் கொண்டு செல்வதற்கு பி.எஸ்.என்.எல்  ஊழியர்கள் திட்டமிட்டனர். 

அவ்வாறு தனியார் நிறுவனங்களிடம் துணை நிறுவனத்தை ஒப்படைக்கும் பட்சத்தில் அவற்றுக்கு பி.எஸ்.என்.எல்  நிறுவனம் பணம் செலுத்த வேண்டிய அவல நிலை உருவாகும்.

மேலும், இப்போது பி.எஸ்.என்.எல்  வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துவரும் ஊழியர்கள் தனியார் நிறுவனத்திற்கும் சேர்த்து வேலை பார்க்கும் அவல நிலை ஏற்படும் என்பதே ஊழியர்களின் கருத்து.

இதனைத் தடுக்கவும், பி.எஸ்.என்.எல்  வாடிக்கையாளர்களும் மக்களும் மத்திய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கிலும் பி.எஸ்.என்.எல்  ஊழியர் சங்கம் சார்பில் இந்த தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஏகாம்பரம் தலைமை தாங்கினார். நிர்வாகி அமலநாதன், கோட்டச் செயலாளர் ஏ.ரவி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு பேச்சாளர்களாக மாநிலத் தலைவர் எம்.கே.ராமசாமி, மாவட்டச் செயலாளர் ஜி.மகேந்திரன், மாநில நிர்வாகி ராஜு உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். 

click me!