
தஞ்சாவூரில் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என கள ஆய்வு செய்த உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல் பட்டியில் உள்ள பள்ளியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் 17 வயது மகள் படித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் பள்ளியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக இணையத்தில் வீடியோ வெளியாகி குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மாணவி தற்கொலை முடிவுக்கு பள்ளி விடுதி வார்டன் சகாயமேரி வேலை வாங்கியதே காரணம் என்று மாணவி வாக்குமூலம் அளித்ததும், மதமாற்ற புகார் போலியானது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனிடையே மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி அவரது தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். பின்னர் இந்த வழக்கு விசாரணையின் போது, மாணவியின் பெற்றோர் தரப்பில் தமிழ்நாடு காவல் துறை விசாரணையில் நம்பிக்கையில்லை. ஆகவே விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தஞ்சை மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை விஉச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் குழந்தை உரிமை கண்காணிப்பு மையம் மற்றும் கல்வி உரிமை கூட்டமைப்பு இணைந்து நடத்திய ஆய்வில் மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வு குழுவின் உறுப்பினர் மூர்த்தி கூறும் போது, தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் என்பது உண்மையில்லை. மாணவியின் குடும்ப சூழலும், பள்ளி சூழலும் தான் மாணவியின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்துள்ளது. குடும்பத்தில் பெரிய பற்று இல்லாத, அன்பில்லாத காரணத்தால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அந்த குழந்தையின் எண்ணத்தை பள்ளி நிர்வாகமும் நிவர்த்தி செய்யவில்லை. அதனால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவி விஷம் அருந்தியது யாருக்கும் தெரியாது. அவர் தொடர் வாந்தி எடுத்ததால் அவரின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதன்பிறகு தான் மாணவி விஷம் அருந்தியது அவர்களுக்கு தெரியவந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.