
திமுக எம்பி திருச்சி சிவா எங்களை வாழவிடாமல் மிரட்டுவதாக அவரின் மகன் சூர்யா சிவா காதல் மனைவியுடன் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பிரதியுஷா என்ற கிரிஸ்துவ பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். இந்த காதலை ஏற்க திருச்சி சிவா மறுத்து விட்டார்.
இதைதொடர்ந்து சூர்யா சிவாவும் பிரதியுஷாவும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதனிடையே இருவருக்கும் திருச்சி சிவா பல இடையூறுகளை தருவதாக சூர்யா சிவா குற்றம் சாட்டி வந்தார்.
இந்நிலையில், இன்று சூர்யா சிவா திருச்சி பிரஸ் கிளப்பில் காதல் மனைவியுடன் செய்தியாளர் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
தனது காதல் மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் எனது தந்தையான எம்பி சிவா ஏற்க மறுக்கிறார். மேலும் எங்களை வாழ விடாமல் மிரட்டி வருகிறார்.
மனைவியின் உயிருக்கு ஆபத்து என்பதால், அவரை காப்பாற்றவே பத்திரிக்கையாளர்களை சந்தித்து முறையிடுகிறேன்.
திருச்சி சிவாவின் தூண்டுதல் காரணமாக எனது மனைவியின் வீட்டுக்கே சென்று போலீஸ் அதிகாரிகள் விபசார வழக்கு போடுவோம் என மிரட்டுகின்றனர்.
அப்பாவை எதிர்த்து அரசியல் செய்யவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனக்கு பிடித்த தலைவர் என்பதால் அவரது சமாதியில் மரியாதை நிமித்தமாக அஞ்சலி செலுத்தினேன்.
அதிமுகவில் சேரும் திட்டம் எதுவுமில்லை என சூர்யா சிவா தெரிவித்தார்.