
கடந்த ஜூலை மாதம் உள்ளாட்சி அமைப்புகளின் காலம் முடிவடைந்தது. இதையடுத்து, நவம்பர் மாதம் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், திமுகவின் மனுவுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், அதில் திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கு தற்காலிக தடை விதித்தது.
தற்போது, உள்ளாட்சி தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால், மே 14ம் தேதிக்குள் தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது.
அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும். இல்லாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரித்தது.
இந்நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையராக இருந்த சீதாராமன் பதவி காலம் கடந்த மாதம் 22ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், புதிய ஆணையர் நியமிக்கும் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது. அதனால், அவகாசம் வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், பதவி காலம் முடிந்ததும் சீதாராமன், தனது பொறுப்பை தமிழக அரசிடம் ஒப்படைத்துவிட்டார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு தெரிவிக்கையில், மாநில தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ளது. இதன் பிறகு புதிய ஆணையர் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை. எனவே, உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது