தமிழகம் முழுவதும் முதல்வருக்கு மௌன அஞ்சலி…

First Published Dec 9, 2016, 11:29 AM IST
Highlights


நாகப்பட்டினம்,

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி நாகையில் நடைப்பெற்ற மௌன ஊர்வலத்தில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

தமிழக முதலமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 5-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் உள்பட அனைத்து கட்சியினரும் அவரது உருவப்படத்திற்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்துகின்றனர். அதேபோல மௌன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.

நாகையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மௌன ஊர்வலம் நேற்று நடைபெற்றது.

நாகை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மறைமலை அடிகளார் சிலையில் இருந்து இந்த மௌன ஊர்வலம் புறப்பட்டது. நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், நாலுகால் மண்டபம், அபிராமி அம்மன் சன்னதி, அண்ணாசிலை, தாமரைகுளம் மற்றும் தம்பித்துரை பூங்கா வழியாக நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஔரித்திடலை சென்று அடைந்தது.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஆட்சியர் பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதில் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

click me!