தேசதுரோக வழக்கு பாய்ந்தது!! கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் மீது மேலும் வழக்கு...!

By vinoth kumarFirst Published Oct 9, 2018, 11:26 AM IST
Highlights

குடியரசு தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவின்கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவின்கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் துணை பேராசிரியரான நிர்மலா தேவி, மாணவிகளை தவறான வழியில் செல்வதற்கு கட்டாயப்படுத்திய வழக்கில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நிர்மலா தேவி கைது தொடர்பாக நக்கீரன் இதழில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், நிர்மலா தேவி, போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் குறித்து நக்கீரன் இதழில் செய்திகள் வெளியானது. அந்த செய்தியில், ஆளுநரை தான் 4 முறை சந்தித்ததாக நிர்மலா தேவி வாக்குமூலத்தில் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்த செய்தி குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

  

இந்த நிலையில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், இன்று காலை புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளார். அங்கு வந்த 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார், அவரை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்துள்ளனர். தமிழக ஆளுநரின் துணை செயலர் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. 

இது குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறை கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால், முதலில் அடையாறு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரிப்பதாக கூறப்பட்டது. 

ஆனால், சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது 124.A பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் அல்லது ஆளுநரின் பணியை செய்ய விடாமல் உள்நோக்குடன் செயல்படுதல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!