அடுத்த குறி கூட்டாளிகளுக்கு!! தெறித்து ஓடும் திருட்டு கும்பல்! அதகளம் பண்ணும் பொன் மாணிக்கவேல்...

By vinoth kumarFirst Published Oct 8, 2018, 5:22 PM IST
Highlights

சிலை கடத்தல் தொழிலில் சம்பந்தப்பட்டுள்ள கிரண் ராவ், ரன்வீர் ஷா உடன் தொடர்பில் இருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சிலை கடத்தல் தொழிலில் சம்பந்தப்பட்டுள்ள கிரண் ராவ், ரன்வீர் ஷா உடன் தொடர்பில் இருக்கும் தொழிலதிபர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட ஒரே ஆண்டில், சுமார் 250 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 பழங்கால சிலைகளை மீட்கப்பட்டுள்ளது. பலகோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சிலைகள் பதுக்கிய விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கை பாய உள்ளது. மேலும் அவர்களது கூட்டளிகளைப் பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாள், சிலை கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். அப்போது அவரிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை, சைதாப்பட்டையில் வசிக்கும் தீனதயாளின் நெருங்கிய நண்பர் ரன்வீர்ஷாவின் சொந்த பங்களாவில் கடநத் 27 ஆம் தேதி சிலை கடத்தல் பிரிவு சோதனை நடத்தியது. அப்போது ஐம்பொன்சிலைகள் உட்பட 60 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 1 ஆம் தேதி, காஞ்சி மாவட்டம், மோகல்வாடி, சென்னை, படப்பை அடுத்த கூழாங்கல்சேரியில் உள்ள ரன்வீர்ஷாவின் பண்ணையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பஞ்சலோக சிலைகள், கல்தூண்கள், கலைபொருட்கள் என ஏராளமானவை பறிமுதல் செய்யப்பட்டன. 

இதனிடையே அமிதிஸ்ட் என்ற ஓட்டலை நடத்த வரும் தொழிலதிபர் கிரண் ராவ், அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், என்னிடம், பல கோடி ரூபாய் கறுப்பு பணம் இருப்பதாகவும், அதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவோம் என்று கூறி, 60 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, இருவர் மிரட்டுகின்றனர் என்று புகாரில் கூறியிருந்தார். 

அந்த புகார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கிரண் ராவிடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் இருப்பதும், அந்த தகவலை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் தெரிவித்து விடுவோம் என்று கூறி, அமிதிஸ்ட் ஓட்டலில், விற்பனை பிரிவு மேலாளர்களாக பணிபுரிந்து வந்த ரைனிட் டைசன், சுரேஷ் ஆகியோர், மிரட்டியது தெரியவந்தது. 

இதனைத் தொடர்ந்து ரைனிட் டைசன் கைது செய்யப்பட்டார். சுரேஷ் தலைமறைவாகி விட்டார். சுரேஷ் குறித்து, சிறையில் இருக்கும் ரைனிட் டைசனிடம் போலீசார் விசாரித்தபோது, கிரண் ராவுக்கு, போயஸ்கார்டன் அருகே கஸ்துாரி எஸ்டேட் பகுதியில், பூங்காவுடன் பங்களா உள்ளது. அங்கு, சிலைகளை பதுக்கி வைத்துள்ளார் என்று டைசன் கூறியுள்ளார். இதையடுத்து ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில், கிரண் ராவின் பங்களாவில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 4 அடி ஆழத்தில் புதைத்து வைத்திருந்த பஞ்சலோக சிலைகள், கல்தூண்கள் என 23 பழங்கால பொருட்களை மீட்டனர்.

 

கிரண் ராவ், ரன்வீர் ஷா தேடப்படும் நபர்கள் என, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு, லுக் அவுட் நோட்டீசையும் அனுப்பப்பட்டுள்ளது. ரன்வீர் ஷா, கிரண் ராவ் தலைமறைவாகியுள்ள நிலையில், சில தொழிலதிபர்களுக்கு சிலை கடத்தலில் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சர்ச்சைகுரிய தொழில் அதிபர்கள், அவர்களின் பின்னணி குறித்து போலீசார் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளனர். 

பட்டியலில் இடம் பெற்றுள்ள தொழிலதிபர்கள் மீது விரைவில் கைது நடவடிக்கை பாய உள்ளது. கிரண் ராவ், ரன்வீர் ஷாவுடன் தொடர்பில் உள்ள தொழிலதிபர்களை மட்டுமின்றி, சிலை கடத்தலில் ஈடுபடும் அவர்களின் நெருங்கிய கூட்டாளிகளைப் பிடிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். சிலை கடத்தல் பிரிவு போலீசாரின் இந்த நடவடிக்கைகளால், மேலும் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது.

click me!