
போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக, துணை கமிட்டியுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, விழுப்புரம், கும்பகோணம் உள்பட 8 கோட்டங்களாக செயல்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்த அரசு காலதாமதம் செய்து வருவதால் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, பணியாளர் சம்மேளனம் உள்பட 10 தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த 14ம் தேதி மாலை முதல் 16ம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன.
பின்னர், கடந்த 16ம் தேதி மாலை தலைமை செயலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு, வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து, கடந்த 24ம் தேதி போக்குவரத்துத் துறை செயலாளர் சந்திரகாந்த் பி.காம்ளே தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் 7ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், ஏற்கனவே ஏற்றுக்கொண்டது போன்று வேலை நிறுத்த போராட்ட நாட்களை விடுப்பாக 2 நாள் மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகளோ, “வரும் 1ம் தேதி சம்பளத்தில் ஏதாவது மாற்றம் இருந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்தனர். இதையடுத்து விடுபட்ட கோரிக்கைகள் தொடர்பாக துணை கமிட்டி அமைத்து பேசிக்கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவித்தனர்.
அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 40 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணை கமிட்டியுடன் இன்று போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து, ஜூன் 1ம் தேதி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிகிறது.