மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி! சார்களின் புகழிடமான அதிமுக! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

Published : Jan 28, 2025, 09:49 AM IST
மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி! சார்களின் புகழிடமான அதிமுக! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சுருக்கம்

சென்னை திரு.வி.க. நகரில் 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி அரசை குறை கூறியதற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். 

சென்னை திரு.வி.க. நகர் பகுதியில் 3 சிறுமிகளை 3 நபர்கள் காதலிப்பதாகக் கூறி, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று , சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இவ்வழக்கில் குற்றம் செய்ததாக மூவரும், உடந்தையாக இருந்ததாக மூவரும் கைதாகியுள்ள நிலையில், கைதானோரில் சிலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன.

சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும். "SIR" போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். இது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கை தீர விசாரித்து, குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்யுமாறு மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறு பரப்புகிறார் என அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை பெரம்பூரை சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகாரின் அடிபடையில் உடனடியாக வழக்கு பதிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் காவல்துறையினர். மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் அவரோடு இருந்த இரண்டு பள்ளி சிறுமிகளையும் மீட்டுள்ளனர். மூன்று சிறுமிகளையும் காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குற்றவாளிகள் அனைவரையும் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

புகார் பெறப்பட்ட உடனே விரைவாக செயலாற்றி பள்ளி மாணவிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி பெண்கள் தொடர்பான புகார்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியை போன்று அலட்சியமாக இல்லாமல் தீவிரமாக செயலாற்றி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக்கொடுத்தும் வருகிறது திராவிட மாடல் ஆட்சி.

விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறுபதிவு போட்டுள்ளார். ’’சார்’’களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் சார்களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் ’’சார் யார்’’ என மறந்து விட்டீரா பழனிசாமி.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் ’’சார் யார்’’ என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ’’சார் யார்’’ என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ’’சார் யார்’’ என்பது மறந்து போனதா?

நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் ’’அதிமுக சார்களை’’மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி ’’சார்’’களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள்.

முதலமைச்சர் அவர்களின் தலைமயிலான திராவிட மடல் ஆட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதோ அதே அளவு முக்கியத்துவதோடு பெண்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது. முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை